×

இன்று (நவ.22) பாலமுரளி கிருஷ்ணா நினைவு தினம்

தலைப்பில் குறிப்பிட்டுள்ள பாடலை கேட்டிருப்பீர்கள்... கேட்காதவர்கள் கேட்டுப்பாருங்கள்... ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்று அந்தக்குரல், ஒவ்வொரு பல்லவியின்போதும் மாறுபட்டு நம்மை எங்கேயோ அழைத்து செல்லும். பாடியவரின் குரலை பாராட்டுவதா? பாடலில் வரும் புல்லாங்குழல் இசையை பாராட்டுவதா? அந்த புல்லாங்குழலுக்கு நிகராக ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் பிரபல கர்நாடக இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மங்களப்பள்ளியில்  என்ற இடத்தில் பட்டாபி ராமய்யா - சூர்யகாந்தம்மாள் தம்பதிக்கு, 1930, ஜூலை 6ம் தேதி பிறந்தவர் முரளிகிருஷ்ணா. தந்தை, தாய் இருவருமே சிறந்த இசை மேதைகள். மகன் மட்டும் விட்டு விடுவாரா என்ன? 5 வயதிலேயே கர்நாடக இசையை கற்கத் தொடங்கினார். 8 வயதில் இவர் பாடிய தியாகராஜ ஆராதனையை கண்டு மிரண்டு போனவர்கள், இவரை அன்று முதல் ‘பால’முரளிகிருஷ்ணா என அழைத்தனர். அந்த வயதிலேயே பெரும்பாலான ராகங்கள் அவருக்கு அத்துப்படி. தூக்கத்தில் இருந்து எழுப்பி ஒரு ராகத்தின் பெயரை சொல்லி பாடச்சொன்னால், சுதி விலகாமல் பாடுவார். இசை ஆர்வம் மேலோங்க பள்ளி படிப்பை கைவிட்டார்.
நல்ல இசை நோயை கூட குணமாக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுதொடர்பான ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னட, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.
400க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புக்களை, 72 மேளகர்த்தாக்களை கொண்டு உருவாக்கி அசத்தினார். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து கர்நாடக சங்கீதத்தில் தனிப்பெரும் சாதனை படைத்தார். தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி இசையில் புதுமைகளை புகுத்தினார்.
இவரது இசைச்சேவையை பாராட்டி ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘செவாலியே’ போன்ற விருதுகள் முக்கியமானவை. 2 முறை தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். ‘பக்த பிரகலாதன்’ என்ற படத்தில் நாரதராக நடித்துள்ளார். கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’  என்ற பாடல் பலராலும் பாராட்டை பெற்றது. ‘திருவிளையாடல்’ படத்தில் இவர் கர்நாடக சங்கீதத்தில் புகுந்து விளையாடிய ‘ஒரு நாள் போதுமா?’, ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே’ என எண்ணற்ற திரைப்பாடல்களை பாடியுள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரஷ்யா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பல நாடுகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தி உள்ளார்.  
கர்நாடக இசையை எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாலமுரளி கிருஷ்ணா. வாழ்நாளின் கடைசி காலம் வரை அவர் பாடுவதை நிறுத்தவில்லை. காற்றில் கலந்து வந்து நம்மை கவர்ந்த அவரது நாத மூச்சு, 2016, நவ.22ம் தேதி நின்று போனது. அவர் மறைந்தாலும் அவரது இசை ஒலி என்றென்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டுதான் இருக்கிறது.

Tags : Balamurali Krishna ,
× RELATED இன்று (நவ.22) பாலமுரளி கிருஷ்ணா நினைவு தினம்